2017-08-31

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் நிர்வாகத்தில் சீர்கேடு ஏற்பட்டு, அதன் அடிப்படையில் பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் மாற்றப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல. எனவே நிர்வாக இயந்திரம் நியாயமாக, சீராக செயல்பட்டு அரசின் கடமையை நிலைநாட்ட வேண்டும். அதனை விட்டு விட்டு தற்போதுள்ள அரசியல் குழப்பங்கள், தடுமாற்றங்கள் ஆகியவற்றால் இது போன்ற தேவையற்ற நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுவது நல்ல ஆட்சிக்கு உகந்ததல்ல. சமீப காலமாக பல அரசியல் குழப்பங்களுக்கு இடையிலும் பள்ளிக் கல்வித்துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இச்சூழலில் எதிர்பாராதவிதமாக பள்ளிக் கல்வித்துறைச் செயலாளரை மாற்றியிருப்பது நல்லதல்ல. தமிழக அரசின் இத்தகைய செயல் பல சந்தேகங்களுக்கும், யூகங்களுக்கும் இடம் கொடுக்கிறது.

எனவே தமிழக முதல்வர் உடனடியாக இப்பிரச்சனையில் நேரடியாக தலையிட்டு பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் மாற்றியிருப்பதை திரும்ப பெற வேண்டும். ஒரு துறையின் முன்னேற்றத்திற்கு சிறப்பாக பணியாற்றும் எந்த ஒரு அதிகாரியையும் காரணமில்லாமல், திடீரென்று மாற்றுவது மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க முடியாது. மேலும் அரசு சார்ந்த வேறு எந்த துறையாக இருந்தாலும் அந்த துறையானது அரசியல் குழப்பங்களினால் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும்.