2017-08-24

குமரி மாவட்டத்தில் த.மா.கா. சார்பில் கொடியேற்று விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று குளச்சலுக்கு ஜி.கே.வாசன் வந்தார். அங்கு அவருக்கு இரும்பிலி பினு மருத்துவமனையில் மாநில செயலாளர் டாக்டர் பினுலால் சிங் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து த.மா.கா. மீனவர் அணி சார்பில் இனயம் வர்த்தக துறைமுகம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்று கொண்ட ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இனயம் வர்த்தக துறைமுகம் அமைக்க அரசு 100 சதவீதம் பாதுகாப்பு உத்தரவு தந்தால் தான் த.மா.கா. ஆதரிக்கும். ஒரு தரப்பினர் துறைமுகம் வேண்டாம் என்றும் மற்றொரு தரப்பினர் வேண்டும் என்றும் சொல்ல என்ன காரணம்? மீனவர்களுக்கு மாற்று தொழில் தெரியாது. புதுக்கோட்டையில் மீத்தேன் எரிவாயு எடுக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். அரசு திட்டங்களை மக்கள் மீது திணிக்கக்கூடாது. திட்டம் கொண்டு வந்தால் அது குறித்து மக்களிடம் விளக்கி பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

தமிழக அரசின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. அது எதிர்க்கட்சிகளால் அல்ல, அ.தி.மு.க.வினரால் தான். அ.தி.மு.க.வில் உள்ள 3 அணிகளில் 2 அணிகள் ஒன்று சேர்ந்து விட்டது. 3–வது அணி ஆட்சிக்கு தடையாக உள்ளது. மீண்டும் தமிழக சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தால் 3–வது அணியினரின் மனநிலையை பொறுத்து அரசு தப்பும். குளச்சல் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை ஆட்சியாளர்கள் முறையாக செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் குளச்சல் காமராஜர் பஸ் நிலையத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பேசினார். தொடர்ந்து இரும்பிலி சந்திப்பு, காந்தி சந்திப்பு, லட்சுமிபுரம் சந்திப்பு ஆகிய இடங்களில் த.மா.கா. கொடியேற்றினார். இந்த நிகழ்ச்சிகளில் மாநில செயலாளர் என்.டி.எஸ்.சார்லஸ், துணை தலைவர் கோவை தங்கம், முன்னாள் எம்.பி. ராம்பாபு, குமரி மாவட்ட தலைவர்கள் ஜாண் ஜேக்கப், டி.ஆர்.செல்வம், துணை தலைவர் டனிஸ்டன், மாவட்ட மகளிர் அணி தலைவி செல்வி விலாஸ்குமார், மருத்துவர் அணி தலைவர் சிம்சன், இளைஞர் அணி தலைவர் சிவ பிரபு, மாநில மாணவர் அணி பொதுச்செயலாளர் அலெக்ஸ் சேகர், மாவட்ட மாணவர் அணி தலைவர் ஜெனில் ஜெபராஜ், மாவட்ட மீனவர் அணி தலைவர் கிங்சிலி, குருந்தன்கோடு வட்டார இளைஞர் அணி தலைவர் ஜாண் ஆன்றனி, குறும்பனை தலைவர் கெல்வின், குளச்சல் நகர தலைவர் அருள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.