2017-08-24

அ.தி.மு.க-வில் இரு அணிகளும் இணைந்த பிறகும் ஆட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்றும் இந்த குழப்பம் எத்தனை நாள்கள் நீடிக்கும் எனத் தெரியவில்லை என்றும் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

ஒருநாள் சுற்றுப்பயணமாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இன்று கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்திருந்தார். மதுரையிலிருந்து கார் மூலம் குமரிக்கு வந்த வாசன், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் த.மா.கா. கொடி ஏற்றி வைத்தார். அவருக்கு நாகர்கோவில் அப்டா மார்க்கெட் அருகே மாவட்டத் தலைவர் செல்வம் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய வாசன், நீட் தேர்வில் கிராமப்புற மாணவர்களின் கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத் தவறான அணுகுமுறையை தமிழக அரசு செய்துள்ளது, மாணவர்கள் மீது அக்கறை இல்லாத அரசாக மத்திய, மாநில அரசுகள் செயல்படுகின்றன. நீட் தேர்வு விவகாரத்தில் ஏழை எளிய மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது எனத் த.மா.கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஒரு வருடம் நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.

அதே நேரத்தில் சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டும். மத்திய – மாநில அரசுகள் காத்திருந்த மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. மாணவர்கள் மீது அக்கறையில்லாதக் கவனமில்லாத அரசாக மத்திய, மாநில அரசுகள் செயல்படுகிறது. கடைசி நேரத்திலாவது மத்திய, மாநில அரசுகள் தங்கள் தவறைத் திருத்திக்கொண்டு உண்மை நிலையுடன் செயல்பட வேண்டும். அ.தி.மு.க-வில் இரு அணிகளும் இணைந்த பிறகு, ஆட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தக் குழப்பம் எத்தனை நாள்கள் நீடிக்கும் எனத் தெரியவில்லை. அ.தி.மு.க-வின் சில எம்.எல்.ஏ-களின் எண்ண ஓட்டத்தின்படி அரசின் நிலைத்தன்மை இருக்கும் என்ற நிலை தமிழகத்தில் உள்ளது” எனத் தெரிவித்தார்.