2018-07-3

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்கவும், சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணத்தைப் பெற்றுத்தரவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று (ஜூலை 2) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த சனிக்கிழமை கடலுக்கு விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். வலைகளை விரித்து மீன்பிடிக்க முயன்றபோது அங்கு வந்த இலங்கை கடற்படை மீனவர்களை சுற்றி வளைத்து அச்சுறுத்தினர். இதனால் மீனவர்கள் பயந்த நிலையில் மீன்பிடி வலைகளை அப்படியே கடலில் தூக்கி எறிந்து விட்டு கரை திரும்பினர்

இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறல் மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே மத்திய, மாநில அரசுகள் மீனவர்கள் பிரச்சினையில் முக்கிய கவனம் செலுத்தி அவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலுக்கு பாதுகாப்பை கொடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டுமல்ல மத்திய பா.ஜ.க அரசு இலங்கை அரசோடு தொடர்பு கொண்டு தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையால் ஏற்படும் தொடர் இன்னல்களுக்கும், துன்பங்களுக்கும், பாதுகாப்பற்ற தன்மைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அழுத்தம் கொடுத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

மேலும் கடந்த காலங்களில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற போது இலங்கை கடற்படை தமிழக மீனவர்களின் படகுகளை சிறைப்பிடித்துச் சென்று இலங்கையில் வைத்துள்ளனர். கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு சொந்தமான படகுகளின் எண்ணிக்கை சுமார் 226. இந்த படகுகளை எல்லாம் உடனடியாக மீட்டுக்கொடுக்க வேண்டும்