2015-01-28

சென்னை,

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த விழிப்புணர்வு பஸ் பிரசார இயக்கத்தை ஜி.கே.வாசன் சென்னையில் இன்று (செவ்வாய்கிழமை) தொடங்கிவைக்கிறார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விழிப்புணர்வு பஸ் பிரசார இயக்கம்

எங்கள் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியை துரிதப்படுத்தியிருக்கிறோம். இதுவரையில் 50 நாட்களில் 32 லட்சம் உறுப்பினர் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்த பிறகு, நாங்கள் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை விவரங்களை அறிவிப்போம்.

தற்போது உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தும் வகையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் விழிப்புணர்வு பஸ் பிரசார இயக்கம் தொடங்கப்பட உள்ளது. இதன்படி நாளை (இன்று) சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் சிலையில் இருந்து பஸ் புறப்படும். இதனை நான் தொடங்கிவைக்கிறேன். பஸ் பிரசார இயக்கம் தமிழகமெங்கும் 15 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து, கட்சியில் பெருமளவில் இளைஞர்களை சேர்க்க பாடுபடுவார்கள்.

பழைய முறையே தொடர வேண்டும்

இன்றைக்கு மத்தியிலும், மாநிலத்திலும் தமிழக மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக விவசாயிகளின் உயிர்நாடி பிரச்சினையான காவிரி, முல்லைப்பெரியாறு பிரச்சினை தீர்க்கப்படவில்லை. தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராம ஊரக வேலை வாய்ப்பு திட்டம் தொடர்ந்து நிறைவேற்றப்படாமல் உள்ளது.

தீவிரவாதம், பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. அமெரிக்கா ஜனாதிபதி இந்தியா வந்துள்ளார். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. ஆனால் அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. எனவே அணுசக்தி உள்பட பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்து மத்திய அரசு அறிவிக்கும்போது, நான் என் கருத்தை தெரிவிக்கிறேன்.

தற்போது பொது மக்களுக்கான கியாஸ் மானியத்திற்கான புதிய நடவடிக்கையை கைவிட வேண்டும். வழக்கம்போல் மானியத்துடன் கூடிய கியாஸ் முறை செயல்பட வழி வகை செய்ய வேண்டும். விவசாயிகளுக்கான மானியங்கள் தொடர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.