2018-04-4
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
காவிரி விவகாரத்தில் நீண்ட நெடிய வருடங்களாக ஒருமித்த முடிவு எடுக்கப்படாமல் உள்ளது. பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வாரங்கள் கெடு கொடுத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அந்த காலக்கெடுவும் கடந்த 29-ந்தேதியுடன் முடிவடைந்துவிட்டது.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு மத்திய அரசுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்து இருக்கிறது. அதே நேரத்தில் டெல்லி பாராளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து தமிழக எம்.பி.க்களும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதெல்லாம் உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மதிப்பது அரசின் தலையாய கடமைகளில் ஒன்று. ஆனால் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மீறும் வகையிலேயே மத்திய அரசின் செயல்பாடுகள் அமைந்து வருவது வேதனை அளிக்கிறது. இந்த விவகாரத்தில் அரசியலமைப்புக்குட்பட்டு சரியான முடிவுகளை கையாளுவதும் உங்கள் கடமையே. எனவே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவைக்கு உரிய ஆலோசனைகளை வழங்கவேண்டும். அந்த வழிகாட்டும் நடவடிக்கை உடனடியாக அமையவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.