2017-08-24

சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் வந்தால், அப்போதுதான் அரசின் சாமர்த்தியம் தெரியும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். கும்பகோணத்தில்  நேற்று அவர் அளித்த பேட்டி: கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முயற்சி எடுத்து வருகிறது. இதற்கு உச்சநீதிமன்றமும் ஒரு ஆலோசனை கூறியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் வக்கீல் கூறியுள்ள கருத்து ஏற்புடையதல்ல. கர்நாடக அரசு அணை கட்ட ஒருபோதும் தமிழகம் அனுமதிக்க கூடாது.  தமிழக அரசு காவிரி பிரச்னையில் நமது உரிமையை மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். காவிரி டெல்டாவில் இந்த ஆண்டும் சம்பா பணிகள் தொடங்கவில்லை. சாகுபடி தொடங்க தமிழக அரசு உரிய நிதி உதவி வழங்க வேண்டும்.

அதிமுக அணிகள் இணைந்துள்ளது நல்ல செய்தி. கட்சிக்குள் பிரிந்தவர்கள் சேர்ந்தது பலம்தான். சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் வந்தால், அப்போதுதான் அரசின் சாமர்த்தியம் தெரியும். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை உடனடியாக அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிற்காலத்தில் விரிவுப்படுத்தும் வகையில் இடவசதிகள் உள்ள இடங்களை  எம்பிக்கள், எம்எல்ஏக்கள், ஆட்சியாளர்கள் இடையூறு இல்லாமல் அதிகாரிகள் இடத்தை தேர்வு செய்ய வேண்டும். உள்ளாட்சித் தேர்தலை எதிர்பார்த்து தமாகாவும் காத்திருக்கிறது. இதில் ஒத்த கருத்துடைய கட்சியோடு கூட்டணி வைப்போம்.  திமுகவுடன் சேர்ந்து போராடுவோம் என்று திவாகரன் கூறியது குறித்து பொறுத்திருந்து பார்ப்போம். கமல்ஹாசன் கருத்து கூறுவது அவரது உரிமை. இதை யாரும் தடுக்க முடியாது. இவ்வாறு வாசன் கூறினார்.