2017-08-14

நீட் தேர்வுமுறை விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனப்போக்கை கைவிட்டு உடனடி தீர்வு காண வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு பெற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள ஜி.கே.வாசன்,
அந்த தீர்மானம் குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதை குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளார். இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாகியுள்ள நிலையில், குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற மத்திய அரசை, மாநில அரசு வற்புறுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இந்த வருட மருத்துவப்படிப்பில் சேர்வதற்கு தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு முறை தடையாக இருக்கக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும் என, ஜி.கே.வாசன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்