2018-04-4

விழுப்புரம் மாவட்டம் வானூர் கிராமத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி நீர் பிரச்சனை என்பது விவசாயிகளின் பயிர் பிரச்சனை அல்ல. உயிர் பிரச்சனையாகும். விவசாயத்திற்கும் குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காமல் இருப்பது தமிழகத்திற்கு அநீதி விளைவிக்கப்படுவதாகும். நியாயம் உண்மைகள் மறைக்கப்படுகிறது மறுக்கப்படுகிறது. டெல்லா பகுதிகள் பாலைவனமாக மாறிவருகிறது.

காவிரிநீர் பிரச்சனையின் முக்கியத்துவத்தை அனைத்து தமிழக மக்களும் நன்கு உணர்ந்துள்ளனர். அதனால்தான் தொழிலாளர்கள், வனிகர்கள், மாணவர்கள் பல தரப்பு மக்களும் நேரடியாக போராட்ட களத்தில் இறங்கி உள்ளனர். மத்திய அரசும் மாநில அரசும் மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளது. காவிரி தண்ணீர் திறக்காமல் 4 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதை அறிந்தும் ஒரு சொட்டு தண்ணீர்கூட தரமாட்டோம் என கர்நாடக அரசு தெரிவித்து இருப்பது விதிமீறலை மீறிய செயல் ஆகும்.

தமிழக முதல்வரும் துணை முதல்வரும் மக்களின் கட்டாயத்தின் பேரில் உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி நீர் பிரச்சனையில் மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் நடுநிலையோடு செயல்பட வேண்டும், நியாயம் கிடைக்கவேண்டும் என்று தமிழக மக்கள் போராடுகின்றனர். தமிழகத்தில் ஒட்டுமொத்த கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிஉள்ளேன். மேலும் இதனை வலியுறுத்தி டெல்டா மாவட்டத்தில் கையெழுத்து இயக்கம் நடத்துகிறோம். உலகத்தமிழர்கள் அனைவரும் பிரதமர் அலுவலகத்திற்கு இமெயில் மூலம் வாரியம் அமைக்க வேண்டுகோள் விடுக்கவேண்டும் மாணவ, மாணவியர் இதனை முன்னெடுத்து செயல்படுத்த வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்தும் போராட்டத்திற்கு எங்களின் ஆதரவு உண்டு அங்கு போராடும் மக்களை நாளை மறுதினம் சந்திக்க உள்ளேன். தமிழக மக்களின் போராட்டம் என்பது மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.

சுப்ரீம் கோர்ட் மத்திய அரசுக்கு உத்தரவு மூலம் அழுத்தம் கொடுக்க வேண்டும். தேசிய கட்சிகளும் மாநில கட்சிகளும் அரசியலுக்கு அப்பாற்பட்டு காவிரி பிரச்சனையில் செயல்படவேண்டும்.

இவ்வாறு ஜி.கே வாசன் கூறினார்