2017-08-6
தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணித் தலைவர் யுவராஜ் தலைமையில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ், தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை சேர்ந்த இளைஞர்கள் ஏராளமானோர் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் முன்னிலையில் த.மா.கா.வில் இணைந்தனர்.
இந்த விழாவில் கட்சியின் மூத்த துணைத் தலைவர்கள் பி.எஸ்.ஞானதேசிகன், கோவை தங்கம், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விழாவின் போது ஜி.கே.வாசன் பேசியதாவது:–
தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் வேண்டும் என்றும், காமராஜர் ஆட்சி போல மாதிரி ஆட்சி வேண்டும் என்பதும் தான் 50 ஆண்டு கால ஆட்சியை பார்த்தவர்களின் எண்ணமாக உள்ளது. இதனை நிறைவேற்றும் ஒரே கட்சி த.மா.கா. தான். மக்களின் பிரச்சினைகளுக்கு முதலில் குரல் கொடுக்கும் கட்சியும் த.மா.கா. தான்.
‘நீட்’ பிரச்சினை, மீனவர் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை, குடிநீர் பிரச்சினை, ‘ஜி.எஸ்.டி.’ பிரச்சினைகளை வலியுறுத்தி த.மா.கா. சார்பில் தெருமுனை பிரசாரங்கள் நடத்தப்படுகின்றன.
தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 40–ஐ தாண்டிவிட்டது.
இந்த நிலையில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியலுக்குள் வரலாம், வராமல் இருக்கலாம் என பத்திரிகைகள் மூலம் தெரிவித்து வருகின்றனர். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அவர்கள் அரசியலுக்குள் வருவதால் த.மா.கா.வுக்கு எந்த வித கவலையும் இல்லை.
ஆளும் அ.தி.மு.க. (அம்மா) அரசு, உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயங்கும் வேளையில், உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என த.மா.கா. வலியுறுத்துகிறது. ஏன் என்றால், நாங்கள் இளைஞர்களையும், மாணவர்களையும் நம்பி உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.