2017-08-24

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: ஒடிசா மாநிலம் பூரி நகரில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாருக்கு கலிங்க – உத்கல் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நேற்று முன்தினம் மாலை உத்திரப் பிரதேசம் மாநிலம் முசாபர் நகரில் உள்ள கத்தோலி அருகே சென்று கொண்டிருந்த போது 14 ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 23 பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனைக்குரியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமாகா சார்பில் ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ரயில்விபத்தில் பலியானவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் நிவாரணத்தொகையை மத்திய அரசு அதிகப்படுத்தி கொடுக்க வேண்டும். மேலும் மத்திய அரசு உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும். இந்த ரயில் விபத்துக்கான காரணத்தை கண்டறிந்து அதற்கேற்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இனி வரும் காலங்களில் ரயில் விபத்துக்கள் நடைபெறாமல் இருப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும்.

மத்திய பாஜ அரசு நாட்டு மக்களின் பிரதான போக்குவரத்தாக அமைந்துள்ள ரயில் போக்குவரத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கி, அதனை முறையாக, முழுமையாகப் பயன்படுத்தி ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்து கொடுத்து, அவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.