2015-01-28

கரூர் மாவட்ட தமாகா உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. முன்னாள் எம்பி நாட்ராயன் தலைமை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அளித்த பேட்டி:
தமிழகத்தில் மின்கட்டண உயர்வு 40 சதவீத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் விசைத்தறி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களாக விசைத்தறியாளர்கள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. கொங்குமண்டலத்தில் 5 லட்சம் விசைத்தறிகள் உள்ளது. இதில் கரூர் மாவட்டத்தில் அதிக அளவில் விசைத்தறிகள் உள்ளது. இதனால் விசைத்தறியாளர்கள் 1 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தமிழக அரசு மின் கட்டண உயர்வு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்.


ரூ.225 ஆக இருந்த சிமென்ட் விலை ரூ.390 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கட்டுமான தொழில் தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. 30 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலைமை உள்ளது. இதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையில் 13வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்தப்போவதாக நல்ல செய்தி வந்துள்ளது. அதனை உடனடியாக செயல்படுத்த வேண்டும். சிங்களர்களை போல தமிழர்களுக்கும் சம உரிமை அளிக்கப்பட வேண்டும். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தமாகா போட்டியிடாது என ஏற்கனவே அறிவித்து விட்டேன். அதற்கு என்ன காரணம் என்பது கட்சி தொண்டர்களுக்கு தெரியும். இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.