2015-12-31

பொது மக்கள் கேஸ் சிலிண்டர்களை தட்டுப்பாடின்றி பெறுவதற்கு ஏதுவாக லாரி ஓட்டுநர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்கள் போராட்டத்தை கைவிடுவதற்கு ஆயில் நிறுவனம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில், சென்னைக்கு அருகில் உள்ள பொன்னேரியில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சமையல் கேஸ் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைகளில், டேங்கர் லாரிகளில் கேஸ் நிரப்பப்பட்டு தென் இந்தியாவில் தமிழகம், புதுவை, கேரளம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் உள்ள கேஸ் ஏஜென்சிகளுக்கு அனுப்பப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

கடந்த 27 ஆம் தேதி நள்ளிரவு முதல் டேங்கர் லாரி ஓட்டுநர்கள் தங்களின் பணிப்பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களின் போராட்டம் கடந்த 4 தினங்களுக்கும் மேலாக தொடர்வதால் கேஸ் கொண்டு செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சில வட மாவட்டங்கள் உட்பட வெளி மாநில மக்களும் கேஸ் சிலிண்டர்கள் பெருவதில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். சாதாரண நாட்களில் சிலிண்டருக்காக பதிவு செய்தால் குறைந்தது 10 நாட்களுக்கு பிறகே கேஸ் சிலிண்டர் கிடைக்கப்பெறுகிறது. தற்போது லாரி ஓட்டுநர்களின் தொடர் போராட்டத்தால் பதிவு செய்த கேஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பொது மக்கள் தாங்களே கேஸ் ஏஜென்சிக்கு நேரடியாகச் சென்று கேஸ் சிலிண்டரை வாங்கும் சூழல் இருக்கிறது. இப்போராட்டத்தால் கேஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் பண்டிகைக் காலமாக இருப்பதால் பொது மக்களுக்கு கேஸ் சிலிண்டர் கிடைப்பதில் மேலும் தாமதம் ஏற்பட்டு, கேஸ் சிலிண்டர்கள் கிடைக்கப்பெறாமல் போகும் சூழலும் உருவாகலாம்.

எனவே இந்திய ஆயில் நிறுவன அதிகாரிகள், லாரி உரிமையாளர்கள், லாரி ஓட்டுநர்கள் சங்கம் ஆகியோர் கொண்ட முத்தரப்பு பேச்சு வார்த்தை உடனடியாக நடந்து விரைவில் லாரி ஓட்டுநர்கள் தங்களின் போராட்டத்தை கைவிடுவதற்கு ஆயில் நிறுவனம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். மேலும் தொழிலாளர்களுக்கு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு, ஒத்துழைத்து, சுமூகத் தீர்வு ஏற்பட்டு உடனடியாக லாரிகளை இயக்க முன்வர வேண்டும். அப்பொழுதுதான் பொது மக்கள் கேஸ் சிலிண்டர்களை தட்டுப்பாடில்லாமல் பெற முடியும். எனவே லாரி ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலனைக் கருத்தில் கொண்டு லாரி ஓட்டுநர்களின் கோரிக்கைகள் நிறைவேறி, அவர்கள் போராட்டத்தை கைவிடுவதற்கு மத்திய அரசு இந்திய ஆயில் நிறுவனத்தை வலியுறுத்தி பொது மக்கள் கேஸ் சிலிண்டர்கள் பெறுவதில் உள்ள சிரமத்தைத் தவிர்த்திட வேண்டும்.